எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, August 10, 2019

சுண்டல் விற்ற பாட்டிக்கு காட்சி கொடுத்த ஏழுமலையான்... அங்கேயும் கடன்தான்

உலகின் பணக்கார கடவுள் கலியுக தெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் ஏழுமலையானை தரிசிக்க தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவரோ தனது திருமணத்திற்காக கடன் வாங்கியவர். அந்த கடனுக்காக வட்டியை மட்டுமே இன்னமும் குபேரனிடம் கட்டிக்கொண்டிருக்கிறார். 

அதே ஏழுமலையான்தான் சுண்டல் விற்று வந்த வயதான பாட்டியிடமும் கடன் பட்டிருக்கிறாராம். இன்றைக்கும் கடனை அடைக்காமல் இருக்கிறாராம். அந்த பாட்டியிடம் பட்ட கடனுக்காக இன்றைக்கும் வீதி உலா வரும் போது தெற்கு மாட வீதியில் அசுவ சாலையை கடக்கும் போது அவசரம் அவசரமாக ஓடி விடுகிறார். அதைப்பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்தால் கர்ண பரம்பரை கதை ஒன்றை சொல்கிறார்கள். சுண்டலைப் போல சுவாரஸ்யமாக இருக்கும் இந்த கதையை சனிக்கிழமை ஏகாதசி திதியான இன்று பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


நீங்களும் படித்து ருசியுங்கள் கடனுக்குச் சுண்டல் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, அதை அடைக்க முடியாமல் ஒரு பாட்டிக்கு பயந்து ஓடும் வேங்கடேச பெருமாள் திருவிளையாடல் கதையை நீங்க மட்டும் படித்தால் போதாது திருப்பதி செல்லும் போது உங்கள் பிள்ளைகளுக்கும் இந்த கதையை சொல்லுங்கள். திருப்பதி அருகே உள்ளது சந்திரகிரி. அந்த சந்திரகிரியில்தான் மங்காபுரம் இன்றைய திருச்சானூர் என்னும் கிராமம் உள்ளது. அங்கு ஆதரவற்ற பாட்டி ஒருத்தி சுண்டல் விற்று வாழ்ந்து வந்தாள். நாள்தோறும் ஏழுமலை மீது கூட்டம் கூட்டமாக மக்கள் ஏறிச் செல்வதைப் பாட்டி பார்த்துக்கொண்டேயிருந்தாள்.


ஒருநாள், அப்படி மலையேறும் ஒருவரிடம், நீங்கள் எல்லாம் எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்டாள்.அதற்கு அந்த ஆள், என்ன பாட்டி, இப்படிக் கேட்கிறாய்...மேலே கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வேங்கடேச பெருமாள் கோயில் இருக்கிறதில்லையா... அவனை தரிசிக்கத்தான் செல்கிறோம்" என்று சொன்னான். பாட்டிக்கு ஆர்வம் மேலிட, "அப்படியா, எனக்கும் இங்கு யாரும் இல்லை. நான் அவனை தரிசித்து இந்தப் பிறவி போதும் என்று வேண்டிக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். அழைத்துச் செல்வீர்களா?" என்று கேட்டாள்> உடனே அந்த நபரும், "சரி பாட்டி, என்னோடு வா" என்று சொல்லி அழைத்துச் சென்றார். பாட்டியும் திருமலை சென்று பெருமாளை தரிசித்தாள். அவள் மனம் குளிர்ந்துவிட்டது. ஆனாலும், பெருமாளை தினமும் கண்ணாரக் கண்டு தரிசிக்க ஆர்வம் கொண்டாள். தன்னை அழைத்து வந்த மனிதரிடம், "நான் இங்கேயே தங்கி இறைவனை தரிசித்துக்கொண்டிருக்க விரும்புகிறேன். மேலும், எனக்கு அவனை பிரத்யட்சமாகக் காண வேண்டும் என்று ஆசை" என்றாள். "பாட்டி, நாங்கள் சம்சாரிகள். எங்களுக்கு அவனை நேரில் காணும் வழிகள் தெரியாது. ஒருவேளை இந்த மலையிலேயே இருந்துகொண்டு தவம்புரியும் முனிவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்" என்று சொல்லி, கிழவியை அந்த முனிவர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டனர். கிழவி அந்த முனிவர்களிடம், "நான் இங்கேயே உங்களுடன் தங்கியிருந்து உங்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறேன்'' என்று கூறினாள். முனிவர்களும் சம்மதித்தனர்.


பாட்டியும் அங்கேயே தங்கிக்கொண்டு,முனிவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துவந்தாள்.தனக்கு என்ன வேண்டும்' என்று முனிவர்களிடம் அவள் சொல்லவேயில்லை. சில நாள்கள் கழித்து முனிவர்களும் அவளிடம் சென்று, "அம்மா, தங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டனர். பாட்டியும், "தனக்கு பெருமாளை கண்களால் பிரத்யட்சமாகக் காண வேண்டும். அதற்கு உதவ முடியுமா?" என்று கேட்டாள். முனிவர்களுக்கோ ஆச்சர்யம்.
;இதுவரை தவமியற்றி வரும் தங்களுக்கே தரிசனம் கொடுக்காத பெருமாள், எதுவும் அறியாத பாட்டிக்கு எவ்வாறு தரிசனம் கொடுப்பார் என்று எண்ணினர். ஆனபோதும் பாட்டியின் நம்பிக்கையைக் கெடுக்காமல், "அம்மா, கோயிலுக்குத் தெற்கே இருக்கும் புளியமரத்தின் அடியில் ஒரு புற்று உள்ளது. பெருமாள் அதனுள் அமர்ந்துதான் தவம் செய்து வந்தார். பிறகு பத்மாவதித் தாயாரை மணந்துகொண்டு திருமலையில் கோயில் கொண்டுவிட்டார். நீ அவர் தவமிருந்த புற்றுக்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டு, பெருமாளை தியானித்துக் கொண்டிருந்தால், உனக்கு அவனுடைய தரிசனம் கிடைக்கக்கூடும்'' என்று கூறினார்கள்.  

 அவர்கள் சொன்னபடியே பாட்டியும் புற்றுக்கு அருகில் சென்று அமர்ந்து கொள்ளத் தயாரானாள். ஆனால். பெருமாளை தரிசிக்க வெறும் கையுடன் போகக்கூடாது என்று நினைத்து, சுண்டல் செய்து எடுத்துக்கொண்டு சென்றாள். ஒவ்வொருநாளும் சுண்டல் செய்து எடுத்துக்கொண்டு புற்றின் அருகே சென்று அமர்ந்துகொள்வாள். வேங்கடேச பெருமாள் வருவானா என்று காத்திருப்பாள். பாட்டியின் வைராக்கியத்தைக் கண்டு மனமிரங்கிய பெருமாள் ஒருநாள், வயோதிக வேடம் கொண்டு புற்றிலிருந்து வெளியே வந்தார். பாட்டியை காணாததுபோல நடந்தார். உடனே பாட்டி ஓடிச்சென்று அவரை நிறுத்தினாள். அவரின் திவ்ய முக தரிசனத்திலேயே அவர் யார் என்று புரிந்துவிட்டது  

 "ஐயா, உங்களைக் கண்டால் பசியால் வாட்டம் கொண்டவர்போல் இருக்கிறது. இந்தச் சுண்டலை உண்டு பசியாறுங்கள்" என்றாள். பெருமாளும் அவள் கையால் தந்த சுண்டலை வாங்கி சுவைத்து உண்டார். சுண்டலை உண்ட பின்பு கிளம்பப் போன பெருமாளைக் பாட்டி தடுத்து,"சுண்டலுக்குப் பணம் வேண்டும் சாமி? " என்றாள். "என்னது பணமா, சொல்லவேயில்லையே... நானே கடன்பட்டுக் கல்யாணம் செய்து இன்றுவரை அதற்கு வட்டி கட்டிக்கொண்டு திரிகிறேன். என்னிடம் ஏது பணம்? " என்று கேட்டார். பாட்டியோ, பெருமாள் தன்னிடம் சிக்கிக்கொண்டதை அறிந்து, "அய்யா, இந்த உலகத்தில் பணம் இல்லாது ஏதேனும் கிடைக்குமா?" என்று கேட்டாள் பெருமாளும், "சரி, இதை கடனாக வைத்துக்கொள். நாளை இதே இடத்திற்கு வந்து பணம் தருகிறேன்" என்று சொல்லி நழுவி விட்டார். ;மறுநாளிலிருந்து பெருமாள் கண்ணில் படவே இல்லை. ஆனால், பாட்டிக்கு வந்தவர் பெருமாள் என்றும், அவர் தனக்குத் தரப்போவது பணம் அல்ல,அது வைகுண்டப்பதவி என்பதையும் அறிந்திருந்தாள். ஆனால், திருமலையிலேயே வாசம்செய்யும் வேங்கடேச பெருமாளோ, அந்தக் பாட்டிக்கு தரவேண்டிய கடனுக்கு அஞ்சுபவர் போலவும், அதனால், அவளிருக்கும் வீதிப்பக்கம் செல்லும்போதெல்லாம், ஒழிந்து மறைந்து ஓடுவது போலவும் விளையாடிக் கொண்டிருந்தார். பாட்டி ஒரு நாள் வைகுண்டப் பதவியையும் பெற்றுவிட்டாள் ஆனாலும் பெருமாள் பாட்டிக்கு அருள்பாலித்த திருவிளையாடலை நினைவுகூரும் விதமாக, இன்றும் வீதியுலா எழுந்தருளும்போது, பாட்டி வாழ்ந்த வீதியில் வரும் போது சத்தமின்றி மேளதாளம் இல்லாமல் வேத மந்திரங்கள் ஓதாமல் அமைதியாக கடன்பட்டவன்போல மறைந்து அடுத்த வீதிக்கு செல்வது தொடர்கிறது. ஶ்ரீ வைகுண்டத்தை வெறுத்து புஷ்கரணித் தீரத்தில் வந்தமர்ந்த வேங்கடேச பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கடன் பெற்றவன் என்றால் அதில் தவறில்லை

No comments:

Post a Comment

அதிகம் படிக்கப் பட்டவை : Popular Posts